200 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் : அரச சேவைகள் பாதிப்பு




அரச சேவையைச் சேர்ந்த 200 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் இன்றும் சுகவீன விடுமுறையை அறிவித்து, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அரச சேவையின் நிறைவேற்று அதிகாரிகளுக்காக வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் ரூபாய் விசேட கொடுப்பனவை அனைத்து அரச சேவையாளர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரச முகாமைத்துவ சேவை, அரச தொழில் அதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய சேவை, உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளிட்டவற்றிற்கு உட்பட்ட தொழிற்சங்கங்கள் தொழில்நுட்பச் சேவைக்கு உட்பட்ட திணைக்களங்கள் மற்றும் அமைச்சுகளுக்கு உட்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பும் சுகவீன விடுமுறையை அறிவித்து இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

ஆசிரியர், அதிபர் வேதன முரண்பாடு உள்ளிட்ட உழைக்கும் மக்களின் ஊதிய பிரச்சினைகளுக்கான நியாயமான தீர்வினை வழங்குமாறு கோரி இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் தலைவர் ஆர்.சங்கர மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இன்றைய இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் அஞ்சல் தொழிற்சங்கமும் ஈடுபட்டுள்ளது.

நாடளாவிய ரீதியாகவுள்ள அஞ்சல், உப அஞ்சலகங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் சேவையாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக அஞ்சல் அலுவலகங்களின் செயற்பாடுகள் மற்றும் அஞ்சல் விநியோகம் என்பன பாதிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, மத்திய அஞ்சல் பரிமாற்ற பணிகள் முற்றாக ஸ்தம்பித்துள்ளன.

இதனால் அஞ்சல் திணைக்களத்திற்கு 140 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் பீ.சத்குமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அஞ்சல் ரயில் வழமைபோல சேவையில் ஈடுபடுவதுடன் அஞ்சல் சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாகத் தொடருந்திலுள்ள அஞ்சல் ரயில் பெட்டி அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.