கலஹாவில் காணாமல் போன 14 வயது சிறுமி யாழ் பேருந்து தரிப்பிடத்தில் கண்டுபிடிப்பு: வெளிவரும் பின்னணி

கலஹாவில் காணாமல் போன 14 வயதான இராசலிங்கம் பிரியதர்ஷினி என்ற சிறுமி ஆறு நாட்களின் பின்னர் யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிடத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

சிறுமி காணாமல் போனமை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தியை அவதானித்த வர்த்தகர் ஒருவர் சிறுமி பேருந்து தரிப்பிடத்தில் இருப்பதை கண்டு யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.

11ஆம் திகதி காலை தான் யாழ்ப்பாணத்திலுள்ள நண்பியை தேடி சென்றதாகவும் செல்லும் வழியில் தனது தொலைபேசி மின்னேற்றம் இல்லாது இயங்க முடியாத நிலையில் இருந்தமையால் நண்பியுடன் தொடர்பு கொள்ள முடியாமல் பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்ததாக சிறுமி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

வீட்டாருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் தனது ஆடைகளை எடுத்துக்கொண்டு 5ஆம் திகதி மாலை ஜன்னல் வழியாக வீட்டிலிருந்து வெளியே பாய்ந்து அவரது நண்பி ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு 4 நாட்கள் இருந்துவிட்டு அந்த வீட்டில் உள்ளவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய தனது வீட்டிற்கு செல்வதற்காக கண்டி பேரூந்து தரிப்பிடத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது அவரது கையில் 9 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததாகவும் அந்த பணத்தில் நான்காயிரம் ரூபாய் அளவில் தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்து தனது வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது நண்பியின் சகோதரி ஒருவருக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தொழில் ஒன்றைப் பெற்று தருமாறு கேட்டுள்ளார். எனினும் தொழில் செய்வதற்கு வயசு போதாது என்றும் அதுவரை விடுதி ஒன்றில் தங்கி இருக்குமாறு சகோதரி தெரிவித்ததையடுத்து யாழ்ப்பாணம் செல்வதற்காக கண்டியிலிருந்து 2 மணியளவில் வவுனியா பேருந்தில் எறியுள்ளார்.

11 மணியளவில் வவுனியாவை அடைந்துள்ளார். பின்னர் இரவு முழுவதும் வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் இருந்த குறித்த சிறுமி அதிகாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் ஏறி யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.

சகோதரியுடன் தொடர்பை ஏற்படுத்த முயன்ற போது சிறுமியின் தொலைபேசி மின்னேற்றம் இல்லாது இயங்க முடியாத நிலையில் இருந்தமையால் அருகில் உள்ள கடைக்கு சென்று தனது தொலைபேசியை மின்னேற்றி தரும்படி கேட்ட போது அந்த வர்த்தகர் சிறுமியை அடையாளம் கண்டு யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.

காவல்துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த சிறுமியின் சகோதரிகள் மற்றும் உறவினர்கள் இருவர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்கு சென்று சிறுமியை அழைத்துச் சென்றனர்.

யாழ்ப்பாணம் காவல் துறையினர் சிறுமியை அழைத்து சென்று கலஹா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்ட பின்பு அவர் கண்டி வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார் எனவும் நீதிமன்றம் இன்று முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.