H-1B விசா வழங்க தடை: ட்ரம்ப் உத்தரவுக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்

இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மக்கள், அமெரிக்காவில் வேலை செய்வதற்கு ஹெச்-1பி உள்ளிட்ட வேலைவாய்ப்பு விசாக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. கொரோனா பரவலால் அமெரிக்காவில் பலரும் வேலைவாய்ப்பை இழந்ததையடுத்து அதிபர் ட்ரம்ப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஹெச்- 1பி விசாக்களை இந்த ஆண்டு இறுதிவரை ரத்து செய்வதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு குறிப்பாக இந்தியாவை சேர்ந்த ஐடி ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதனை எதிர்த்து அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் மற்றும் சில நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் வடக்கு கலிபோர்னியாவின் மாவட்ட நீதிபதியான, Jeffrey White, அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளார். அதிபர் அவரது அரசியலமைப்பு அதிகாரத்தை மீறி விட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். U.S. Chamber of Commerce உள்ளிட்ட சில அமைப்புகள் ட்ரம்ப் அரசு மீது புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் விளைவாக, அமெரிக்க நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டதால், இதற்கான எதிர்ப்பு வலுத்து வந்தது.