7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் நிச்சயம் ஒப்புதல் அளிப்பார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு தமிழக அரசு அழுத்தம் தந்துள்ளதாக கூறினார். உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு கண்டிப்பாக ஒப்புதல் தர வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், இந்த மசோதாவுக்கு ஆளுநர் நிச்சயம் ஒப்புதல் அளிப்பார் என்றார். ஆளுநர் ஒப்புதல் தந்த உடன் தான் மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறினார். 

இந்நிலையில், மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.  

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளியில் படித்த தாம், மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியாக உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை உணர்வுப் பூர்வமாக உணர்ந்து 7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்ததாகக் கூறியுள்ளார்.