7 பேர் விடுதலை குறித்து பேச திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை: முதல்வர் பழனிசாமி

திருப்பூர் மாவட்டத்தில், 31 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி, 287 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு, அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதை தொடர்ந்து, தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார். 

இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, அரசின் நல்ல நடவடிக்கைகளால், மீண்டும் திருப்பூர் வர வெளிமாநில தொழிலாளர்கள் ஆர்வம் காட்டுவதாக குறிப்பிட்டார். மேலும், அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள், 44 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறிய முதலமைச்சர், உயர்மின் கோபுரங்கள் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேச, திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.