5 மணி நேர விசாரணை முடிவடைந்து வெளியேறினார் ரிசாட் பதியுதீன்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான 5 மணி நேர விசாரணை இன்று  வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள குற்ற புலனாய்வு பிரிவில் இடம்பெற்றது.

இன்று காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு பிரிவினரின் அலுவலகத்திற்கு ஆஜராகியிருந்த ரிசாட் மாலை 3 மணியளவில் விசாரணை முடிவடைந்து வெளியேறினார். 

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பிலான விவகாரத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் ஆஜராக வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரி இந்த அழைப்பாணையை விடுத்திருந்தார்.

அவரது தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைக்கு அழைப்பதை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு தேர்தல் ஆணையாளர் எழுத்துமூலம் அறிவித்திருந்த நிலையிலும் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை குறித்த விசாரணையை வவுனியாவில் முன்னெடுக்குமாறு றிசாட் தரப்பு தனது சட்டத்தரணிகளூடாக கோட்டை நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதனை ஆராய்ந்த கோட்டை நீதவான்  வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ்நிலையத்தில் அமைந்துள்ள குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரிவில் இன்று ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு பணித்திருந்தார்.

அதற்கமைய இன்று காலை10 மணிக்கு ஈரப்பெரியகுளம் பொலிஸ்நிலையத்தில் அமைந்துள்ள குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆஜராகியிருந்தார்.

இதன் பின்னர் இவ் விசாரணை அரசியல் பழிவாங்கல் என ரிசாட் பதியுர்தீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததுடன் தொடர்ந்தும் விசாரணைக்கு அழைத்தால் நீதிமன்றத்தினை நாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.