கொரோனாவிற்கு எதிரான மருத்துவ பரிசோதனையில் வெற்றி கண்டது ஒக்ஸ்போர்ட்!

கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்களின் உடலில் பாரிய பக்க விளைவுகளை ஏற்படுத்தாது, கொரோனா வைரஸூக்கு எதிரான நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகிறது என பிரிட்டன் – ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அதன் முதல் சுற்று மனிதப் பரிசோதனையின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பரிசோதனையின் அடுத்தடுத்த கட்டங்களின் பின்னரே இந்தத் தடுப்பூசி மனிதப் பயன்பாட்டுக்கு உகந்ததா? என்பது முடிவு செய்யப்படும்.

முதல் சுற்று மனிதப் பரிசோதனையில் 1,077 பேருக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை இடம்பெற்றது. இதன் முடிவில் இந்த தடுப்பு மருந்து இரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரிப்பதுடன், கொரோனா வைரசுக்கு எதிரான இரட்டை நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தூண்டுவதும் தெரியவந்துள்ளது.

இந்த தடுப்பூசியில் குறிப்பிடத்தக்க பக்க விளைவாக மருந்தை எடுத்தக்கொண்ட 70 வீதமானவர்களுக்கு தலைவலி ஏற்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனைவிட பாரிய பக்க விளைவுகள் எதுவும் காணப்படவில்லை.

ஏற்கனவே 200 கோடி தடுப்பூசிகளுக்கு முன்பதிவு கிடைத்துள்ளது என்றும் கூறுகின்றனர்

எனினும் இந்த கொரோனா தடுப்பூசியை பொதுப் பாவனைக்கு அறிமுகப்படுத்த முன்பு இன்னும் நிறைய பணிகள் உள்ளன என ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் சாரா கில்பேர்ட் தெரிவித்துள்ளார்.

இந்தத் தடுப்பூசி ஆரம்பகட்ட முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.