20 வது திருத்த சட்டத்தின் ஊடாக நீதிமன்ற சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாது – நீதியமைச்சர் அலிசப்ரி

20 வது திருத்த சட்டத்தின் ஊடாக நீதிமன்ற சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாது என நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “20 ஆவது திருத்தம் மூலம் நீதிமன்ற சுயாதீன தன்மைக்கு ஒருபோதும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் நீதிமன்றத்தில் எதிர்த்தரப்பினரால் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறான நிலையில் 20ஆவது திருத்தத்தில் நாடாளுமன்ற செயற்குழுவின் போது திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருக்கும்  விடயங்கள் அமைச்சரவை, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அனுமதியுடன் எனக்கு வழங்கப்பட்டிருந்தன.அதனை நான் சட்டமா அதிபருக்கு வழங்கியிருந்தேன். அதனையே சட்டமா அதிபர் நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்தியிருக்கின்றார்.

மேலும் சட்டமா அதிபரால் நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்தியிருக்கும் திருத்தங்கள் தொடர்பில் அச்சப்படத்தேவையில்லை.அதனை நாங்கள் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்து செயற்குழுவின்போது, குறித்த திருத்தங்களை மேற்கொள்வோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.