2 வயதில் கடத்தப்பட்ட குழந்தை, 38 ஆண்டுகளுக்கு பின்னர் பெற்றோர்களுடன் சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

வடமேற்கு சீன பகுதியை சேர்ந்தவர்கள் சு பிங்டே – ஹாங் ரென்சியூ தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 1982 ஆம் ஆண்டு மே மாதம் சு பிங்டே பணி நிமித்தமாக வெளியில் சென்றிருந்த நிலையில், கணவர் விரைவில் வந்துவிடுவார் என எண்ணி அவரது மனைவி வீட்டைப் பூட்டாமல் உறங்கச்சென்றுள்ளார். அவர்களின் 2 குழந்தைகளும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தன.

ஆனால் மறுநாள் காலையில் எழுந்த ஹாங் ரென்சியூ-க்கு அதிர்ச்சி காத்திருந்தது. இரவில் தூங்க வைத்திருந்த அவரது மகன் ஜின் சுய் காணவில்லை. வீடு முழுவதும் தேடிப் பார்த்த நிலையிலும் அவன் கிடைக்கவில்லை. அவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளார்கள். இதைப் பயன்படுத்திய சிலர் 2 வயது மகனைக் கடத்தி சென்றுள்ளார்கள். காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், பல நாட்கள் தேடியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தனது மகன் மீண்டும் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் அவனை தேடியே பல வருடங்களை கழித்துள்ளனர் அந்த ஏழைப் பெற்றோர்கள். 

இந்நிலையில் 38 வருடங்கள் கழித்து அவர்களின் தேடுதலுக்கு நன்மை கிடைத்துள்ளது. 38 வருடங்களுக்கு பிறகு தற்போது சீன தேசிய டி.என்.ஏ மையத்தின் பரிசோதனை மூலம் 2 வயதில் காணாமல் போன ஜின் சுய் கண்டுபிடிக்கப்பட்டார். கண்டுபிடிக்கப்பட்ட ஜின் சுய்க்கு தற்போது திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். 2 வயதில் காணாமல் போன மகனை 38 வருடங்களுக்குப் பிறகு பேரக்குழந்தைகளுடன் சந்தித்த பெற்றோர்கள் கட்டிப்பிடித்து அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.