கொரோனா ஊரடங்கால் பலரும் வீட்டில் சும்மா இருந்து நேரத்தை போக்கிவரும் நிலையில், ஒரு இளைஞர் 2 மணி நேரம் சும்மா உட்கார்ந்து குறிப்பிட்ட தொகையை தேற்றியுள்ளார். இந்தோனேசியாவை சேர்ந்தவர் முகமது திதிட். இவர், யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். கடந்த ஜூலை 10ம் தேதியன்று இவர் ஒரு வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டார். அதில், சுமார் 2 மணி நேரம் திதிட் எதுவும் செய்யாமல் சும்மாவே அமர்ந்துள்ளார்.
அந்த வீடியோவை இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ’2 JAM nggak ngapa-ngapain (2 hours of doing nothing)’ என்ற பெயரில் அந்த வீடியோ பதிவிடப்பட்ட நிலையில், அவர் ஏன் சும்மாவே உட்கார்ந்திருக்கிறார் என கேள்விகளையும் பதிவிட்டுவருகின்றனர்.
இன்னும் சிலரோ 2 மணி நேரத்தில் அந்த நபர் எத்தனை முறை கண் சிமிட்டினார் என்பதை எண்ணி அதையும் கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டுள்ளனர். இளைஞர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் வீடியோ ஒன்றை பதிவுசெய்யுமாறு அவரது ரசிகர்கள் அவரிடம் கேட்ட நிலையில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளதாக திதிட் தெரிவித்துள்ளார்.
பல லட்சம் பேர் இந்த வீடியோவைப் பார்த்துள்ளதால், குறிப்பிட்ட தொகை அவருக்கு யுடியூப் மூலம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.