15 ஆண்டுகளில் முதல்முறையாக, சிம்லாவில் நவம்பர் மாத பனிப்பொழிவு!

ஹிமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவு ஆரம்பமாகிவிட்டது. பெரும்பாலும் பிப்ரவரி வரை பனிப்பொழிவு இருக்கும். இதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு செல்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 

இந்நிலையில் சிம்லாவில் 15 ஆண்டுகளுக்கு முதல்முறையாக நவம்பர் மாதத்தில் பனிப்பொழிவு வந்துள்ளது. அதேபோல் வெப்பநிலையில் 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை காணப்படுகிறது. சிம்லா முழுவதும் பனி படர்ந்து அழகாக காட்சியளிக்கிறது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இமாச்சல பிரதேச இயக்குநர் மன்மோகன் சிங் கூறுகையில், ‘சிம்லாவில் உள்ள நர்கந்தா, கராபதர், குஃப்ரி உள்ளிட்ட கிராமங்களில் 15 ஆண்டுகளில் முதல்முறையாக நவம்பரில் பனிப்பொழிவு வந்துள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்தில் ஹிமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவும், ஓரிரு இடங்களில் மிதமான மழைப்பொழிவும் இருக்க வாய்ப்புள்ளது’ என தெரிவித்துள்ளார்.