சுய தனிமைப்படுத்தல் நடைமுறைகளை கடுமையாக கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் சுய தனிமைப்படுத்தல் நடைமுறைகளை கடுமையாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்ட அனைத்து குடும்பங்களும் தத்தமது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.அவ்வாறு தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 31 ஆயிரத்து 457 வீடுகளில் 84 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் 13 ஆயிரத்து 911 குடும்பங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்து 676 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னரும் முறையாக கண்காணிக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் சந்திக்கும் கொவிட் ஒழிப்பு விசேட செயலணி நேற்று (வியாழக்கிழமை) ஒன்றுகூடியபோதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்தார்.

நோய்த்தொற்றாளர்கள் சமூகத்தில் கண்டறியப்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் வசிக்கும் பிரதேசம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

தேவை ஏற்படின் அப்பிரதேசத்தை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.தோட்டங்கள் மற்றும் அடுக்குமாடி வீடுகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பொருளாதார மத்திய நிலையங்களை மொத்த விற்பனைக்கு மட்டும் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.  சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றியும் பி.சி.ஆர்.பரிசோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டும் மிகுந்த கவனத்துடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மரக்கறி, பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை எடுத்துக்கொண்டு மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்தில் ஈடுபடும் லொறிகளுக்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்கள் அவசியமில்லை. கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக பேணுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், தனியார் வைத்தியசாலைகளின் பங்களிப்புடன் சுகாதார அமைச்சினதும் கடற் படையினதும் கண்காணிப்பின் கீழ் வர்த்தக வலயத்தை அண்டிய பிரதேசங்களில் பி.சி.ஆர்.பரிசோதனைகளை எழுமாறாகவும் தொடர்ச்சியாகவும் செய்வதற்கும் ஜனாதிபதியினால் பணிப்புரை வழங்கப்பட்டது.