1 லட்சம் மக்கள் தொகையில் அதிக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மாநிலங்களில் தமிழகத்துக்கு 11 வது இடம்!

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நோய் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு கொரோனா பரிசோதனைகளையும் நாடு முழுவதும் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் நாட்டில் வைரஸ் பாதிப்பை துரிதமாக கண்டறியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் ஒரு நாளைக்கு அதிக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மாநிலங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் 12 மாநிலங்கள் ஒரு லட்சம் மக்கள் தொகையில் அதிகமான கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்கின்றன.

அதில் ஒரு நாளுக்கு ஒரு லட்சம் மக்கள் தொகையில் 3,258 கொரோனா பரிசோதனைகளுடன் கேரளா முதலிடத்தில் உள்ளது. 3,225 பரிசோதனைகளுடன் டெல்லி இரண்டாம் இடத்திலும் 1,550 பரிசோதனைகளுடன் கர்நாடகா 3 ஆவது இடத்திலும் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் மக்கள் தொகையில் ஆந்திரா 1,418, பீகார் 1,093, ஒடிசா 1,072, கோவா 1,058, ஜார்கண்ட் 994, ஜம்மு காஷ்மீர் 984, தெலங்கானா 947,ஹரியானா 863 பரிசோதனைகளை மேற்கொள்கின்றன. இதில் தமிழகம் 936 பரிசோதனைகளுடன் 11 ஆவது இடத்தில் உள்ளது.

இதுவரை நாட்டில் மொத்தமாக 10 கோடிக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய அளவில் பார்க்கும்போது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 844 கொரோனா பரிசோதனைகள் ஒரு நாளைக்கு மேற்கொள்ளப்படுகிறது, மேலும் பாதிப்பை கட்டுப்படுத்தவும் துரிதமான பரிசோதனைகளையும் மேற்கொள்ள நாடு முழுவதும் 2000 கொரோனா பரிசோதன மையங்கள் அமைக்கப்பட்டு ஒரு நாளைக்கு 15 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.