ஹெச் 1 பி விசாக்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா

வேலை நிமித்தம் காரணமாக அமெரிக்கா செல்வோருக்கு வழங்கப்படும் ஹெச் 1 பி விசாக்களுக்கான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது.


கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் பல இலட்சம் பேர் வேலையிழந்த நிலையில் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் விதமாக வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் வேலை தொடர்பான விசாக்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தார்.
இதனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரிய சென்ற பல இலட்சம் பேர் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பிவைக்கப்படும் சூழ்நிலை உருவானது.


இது குறித்து இந்திய அரசும் அமெரிக்காவிடம் தனது கவலையை தெரிவித்து வந்தது. இந்த நிலையில் தற்போது ஹெச் 1 பி விசாக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதன்படி கொரோனா துயர் துடைப்பு பணிக்கு செல்வோர், அமெரிக்க மக்களால் நிரப்பமுடியாத பணியிடங்களில் பணிபுரிவோர், தனித்திறமை கொண்ட தொழில்நுட்பப் பிரிவினர் போன்ற பலருக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.


ஏற்கனவே பணியில் இருப்பவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை பணியமர்த்த கட்டாயப்படுத்தினால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற காரணத்தாலும் பல்வேறு தளர்வுகளை அமெரிக்கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.