ஹரி & அருண் விஜய் இணையும் ஆக்‌ஷன் படம் – பட்ஜெட்டைக் கேட்டு ஓடும் தயாரிப்பாளர்கள்!

இயக்குனர் ஹரி தனது மைத்துனர் அருண் விஜய்யுடன் இணையும் படத்துக்கு எக்கசக்கமாக பட்ஜெட் செலவு ஆவதால் அதை தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயங்குவதாக சொல்லப்படுகிறது.

சில மாதங்களுக்கும் முன்னதாக சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ‘அருவா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஸ்டுடியோ கிரின் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு நாயகியாக ராஷி கண்ணா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இப்போது சூர்யா பாண்டிராஜ் இயக்கும் பெயரிடாத படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிப்பதற்கே ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் இப்போது அருவா படம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அருவா கதையை லேசாக மாற்றி தனது மனைவியின் தம்பியான அருண் விஜய்யை வைத்து இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இருவரும் தங்கள் சம்பளத்தோடு சேர்த்து படத்தின் பட்ஜெட் 23 கோடி ரூபாய் என சொல்வதால் அதைத் தயாரிக்க தயாரிப்பாளர்கள் அஞ்சுவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக 12 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே செலவிட முடியும் எனக் கருதுவதால் இந்த படத்தைத் தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் ஏ எம் ரத்னம் இந்த படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.