ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருவருக்கு கோவிட்-19 உறுதி

ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் பணிப்புரிந்த  இருவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில், கடந்த 23 ஆம்  திகதி 57 மீனவர்கள்  உட்பட மூவருக்கு  பி.சி.ஆர்.பரிசோதனை மேற்காள்ளப்பட்டது.குறித்த பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகியுள்ள நிலையில் இருவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர்,  கடந்த 21ஆம் திகதி, பெலியகொட மீன் சந்தைக்குச் சென்றமையால் சுய கட்டுப்பாட்டில் இருந்துள்ளார். ஆனால் மற்றொருவர், பி.சி.ஆர்.பரிசோதனையின் முடிவுகள் கிடைக்கும் வரை சமூகத்தில் அலைந்து திரிந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தினை சேர்ந்த மொத்தம் 57 மீனவர்கள் மற்றும் அண்மைய நாட்களில் பல்வேறு காரணங்களுக்காக கம்பஹாவிற்கு பயணம் செய்த 60 பேரின் மாதிரிகள் கடந்த 23 ஆம் திகதி பி.சி.ஆர்.பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பெலியகொட பகுதிக்கு சென்ற ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களுக்கும் இதேபோன்று பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின்பேரில் பிற மீனவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.