ஹத்ராசில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தியும் சந்தித்தனர். இந்த நிலையில் நேற்று சமாஜ்வாதி கட்சி பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். தர்மேந்திர யாதவ் தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் அந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி வழங்க கோரி சமாஜ்வாதி கட்சியினர் ஹத்ராசில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததை அடுத்து தடியடி நடத்தி போலீசார் போராட்டகாரர்களை கலைத்தனர். 


இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் தந்தை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மருத்துவகுழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நலமாக உள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. எம்.எல்.ஏக்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.