ஸ்பெயினில் கடற்கரையில் வலம் வந்த கொரோனா நோயாளி: மக்கள் அதிர்ச்சி!

கொரோனா தொற்று உறுதியானவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். மற்றவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில் ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண், வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் அரசின் விதிமுறைகளை மீறி வெளியே வந்துள்ளார். 

இதனையடுத்து மக்கள் அதிகம் கூடியிருந்த கடற்கரையில் அவர் வலம் வந்த போது, காவல்துறையினருக்கு இதுதொடர்பாக தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினர், அந்தப் பெண்ணை கைது செய்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்தப் பெண்ணின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிமைப்படுத்தும் உத்தரவை மீறியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதா என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.