ஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ் அபுதாபியில் இருப்பதாக தகவல்

நாட்டை விட்டு வெளியேறிய ஸ்பெயினின் முன்னாள் மன்னர் அபுதாபியில் தஞ்சம்?

ஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ் அபுதாபியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊழல் விசாரணைக்கு உட்பட்ட 82 வயதான ஜுவான் கார்லோஸ் எங்கு சென்றுள்ளார் என்பது குறித்து ஸ்பெயினின் ஊடகங்கள் பல ஊடகங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது ஜுவான் கார்லோஸ் திங்களன்று அபுதாபிக்கு ஒரு தனியார் ஜெட் விமானத்தில் பறந்ததாக ஏபிசி செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜுவான் கார்லோஸ் திங்களன்று ஸ்பெயினிலிருந்து வெளியேறுவதற்கான தனது முடிவை திடீரென அறிவித்ததிலிருந்து அவர் இருக்கும் இடம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த விமானம் பரிஸிலிருந்து அபுதாபிக்கு செல்லும் வழியில் இருந்ததாகவும் ஜுவான் கார்லோஸ் நான்கு பாதுகாப்பு காவலர்கள் மற்றும் ஒரு நபரை அழைத்துச் செல்வதற்காக வடமேற்கு ஸ்பெயின் நகரமான வைகோவில் நிறுத்தப்பட்டதாகவும் ஏபிசி தெரிவித்துள்ளது.

அதிவேக ரயில் ஒப்பந்தத்திற்காக சவுதி அரசரிடமிருந்து மன்னர் ஜூவான் கார்லோஸ் 100 மில்லியன் டொலர்கள் தொகை பெற்றதாக கடந்த மார்ச்சில் குற்றச்சாட்டு எழுந்தது இதனையடுத்து தொடர்ந்து இவர் மீது லஞ்ச, ஊழல் புகார்கள் எழுந்தன. இதில் பெற்ற பணத்தை தன் முன்னாள் காதலிக்கு அனுப்பியதாக ஸ்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

1975ஆம் ஆண்டு ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராங்கோ மரணமடைந்த பிறகு ஆட்சியைப் பிடித்த கார்லோஸ் ஸ்பெயினை எதேச்சதிகாரப் பிடியிலிருந்து ஜனநாயகப் பாதைக்கு திருப்பியவர் என்ற அளவில் மிகவும் மதிக்கப்பட்டார்.

இவ்வாறு ஸ்பெயின் நாட்டு மன்னராக 35 ஆண்டுகளுக்கு மேல் இருந்த 82 வயதான ஜுவான் கார்லோஸ்இ தனது மகன் பிலிப்பை கடந்த 2014ஆம் ஆண்டு மன்னராக முடிசூட்டினார்.