வெள்ளி கிரகத்தில் உயிரினங்கள் இருக்க வாய்ப்பு: ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு!

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மற்ற கிரகங்களில் ஆய்வு மேற்கொள்வதில் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்துகின்றனர். பூமியை தவிர மற்ற கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா அல்லது வேறு ஏதேனும் உயிரினங்கள் வாழ்கிறதா என ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். அந்த வகையில் வெள்ளி கிரகத்தில் உயிரினங்கள் வசிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதை வானியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். 

வெள்ளியின் வளிமண்டலத்தில் பாஸ்பைன் என்ற வாயுவை கண்டறிந்துள்ளனர். ஏதாவது உயிரினங்கள் இருந்தால் மட்டுமே இந்த வாயு இருக்கும் என கூறுகின்றனர். பூமியில் மனிதர்கள் வாழ்வதால் இங்கும் இதுபோன்ற வாயு காணப்படுகிறது. பொதுவாக பாஸ்பைன் வாயு இரண்டு காரணங்களால் வெளியாகும். ஒன்று, மனிதனின் தொழில்நுட்ப செயல்பாடுகள் காரணமாக வெளியாகும். மற்றொன்று, மைக்ரோப்ஸ் எனப்படும் பாக்டீரியா, பூஞ்சை, ஆல்காக்கள் உள்ளிட்டவைகளால் வெளியாகும். ஆனால் உயிரற்ற பொருட்களால் இந்த வாயு வெளியிடப்பட வாய்ப்பில்லை. இது முழுமையாக உறுதியாகும் பட்சத்தில், விண்வெளி ஆராய்ச்சியில் இது மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படும் என்கின்றனர்.

வெள்ளி கிரகத்தில் அதிகமான வெப்பநிலை காணப்படுவதால், இதில் ஆராய்ச்சி மேற்கொள்வதிலும் சிரமம் எழுந்துள்ளது, ஆனால் இந்த வாயு தொடர்பாக முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதே ஆராய்ச்சியாளர்களின் விருப்பமாக உள்ளது. இந்த கண்டுபிடிப்பு மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் கூறுகின்றனர். ஆனால் இதில் பல கேள்விகளும் எழுந்துள்ளன. வெள்ளி கிரகம் பற்றிய முழுமையாக தகவல்கள் இதுவரை கிடைக்காத பட்சத்தில், உயிரினங்கள் வசிப்பதை உறுதி செய்ய முடியாது என சிலர் கூறுகின்றனர். வேறு சில காரணங்களால் கூட இந்த வாயு வெளியாகியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். முழுமையான ஆய்வு மேற்கொண்ட பிறகே இதுதொடர்பான உண்மையான தகவல்கள் தெரியவரும்.