வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கு ரூ. 10 கோடி நிதியுதவி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் ஹைதராபாத் மற்றும் சில மாவட்டங்களில் கனமழை பெய்தது, இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு கடுமையான சேதங்களும் ஏற்பட்டுள்ளன. மேலும் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீட்புப்பணியில் தெலங்கான மாநில போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

ந்நிலையில், தெலங்கானா மாநில வெள்ளப்பாதிப்பிற்கு நிவாரணமாக ரூ. 10 கோடி நிதியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களும் அறிவித்து தமிழக முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெலங்கானா அரசின் துரிதமான மீட்பு பணியை பாராட்டியுள்ள முதல்வர் பழனிசாமி, தமிழ் நாட்டு மக்களின் சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும், உயிரிழந்த குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தெலங்கான ஆளுநர் தமிழிசை சௌதரராஜன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், “அண்டை மாநில மக்களின் துயரத்தில் பங்கு கொள்ளும் மனதுடன் தமிழக மக்களின் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானா மக்களுக்கு ரூ.10 கோடி நிதி உதவி அளிப்பதாகவும் மற்றும் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ள தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு, தமிழகத்தின் மகளாகவும், தெலங்கானாவின் சகோதரியாகவும் மற்றும் ஆளுநராகவும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.