வெளியூர் சென்று திரும்பியவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்”- கோவை மாநகராட்சி ஆணையாளர்!

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பினர். கொண்டாட்டங்கள் முடிந்து, தற்போது மீண்டும் தாங்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி வர ஆரம்பித்து விட்டனர். இதனிடையே, கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரும்பாலான மக்கள் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று திரும்பியுள்ளதால் கொரோனா பரவல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. 

அதனால் பண்டிகை காலங்களில் வெளியூர் சென்று திரும்பி வந்தவர்கள் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறு கோவை மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவையில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதாகவும், அதனால் மீண்டும் பரவல் ஏற்படாமல் தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறியுள்ளார். பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.