வெங்காய விலை கண்டிப்பாக கட்டுக்குள் கொண்டு வரப்படும் – அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை தேனாம்பேட்டை பண்ணை பசுமை கடையில்  குறைந்த விலையில் வெங்காயம் விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜு பண்ணை பசுமை கடையில் ஆய்வு செய்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் பெரிய வெங்காயமும், 10 லட்சம் டன் சின்ன வெங்காயமும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

விலை நிர்ணயம் நிதியத்தின் மூலம் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அந்த நிதியின் மூலம் விலை உயரும் பொருட்களின் விலை கட்டுப்படுத்தப்படுவதால் வெங்காயத்தை பதுக்க வாய்ப்பில்லை என குறிப்பிட்டார். இந்த ஆண்டு 150 டன்னுக்கு வெங்காயம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது எனக்கூறிய அமைச்சர் நாசிக், மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெங்காயம் வர வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். கொரோனா  காலத்தில் மக்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். 

நாளை முதல் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் வெங்காய விலையைக் கேட்டால் கண்ணீர் வருவது எனக்கூறும் திமுக ஆட்சியில்தான் கண்ணீர் வந்ததாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.