வீடுகளில் உள்ளவர்களின் தகவல்களை தேசிய பாதுகாப்பு கருதி திரட்ட ஆரம்பித்துள்ளோம் -SSP ஜெயந்த ரட்நாயக்க…

சுரகிமு லங்கா மூலம் தேசிய பாதுகாப்பினை கட்டியெழுப்ப வேண்டும் என அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்க தெரிவித்தார்.

சம்மாந்துறையில் சுரகிமு லங்கா சமூகப் பொலிஸ் சேவையை விஸ்தரிக்கும் கூட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் தலைமையில் இன்று முற்பகல் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெற்ற வேளை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

நாடளாவிய ரீதியில் வீடுகளில் உள்ளவர்களின் தகவல்களை தேசிய பாதுகாப்பு கருதி தற்போது திரட்ட ஆரம்பித்துள்ளோம்.இதற்கமைய எமது கிராம சேவகர்கள் பிரதேச செயலக அதிகாரிகளின் உதவிகளை தகவல் சேகரிப்பதற்காக நாடியுள்ளோம்.தற்போதைய ஜனாதிபதியின் வழிநடத்தில் சுற்றாடலை பாதுகாப்பதற்கு மற்றுமொரு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம்.நாட்டின் பாதுகாப்பில் தான் எமது பாதுகாப்பும் தங்கி உள்ளது.

நாங்கள் எல்லோரும் ஒன்றினைந்து சுரகிமு லங்காவினை பலப்படுத்துவதன் ஊடாக எமது தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த முடியும்.எமக்கிடையே ஒற்றுமை சீர்குலைந்து சந்தேகம் என்பன ஏற்படுவதற்கு காரணம் கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பதை நாம் அறிவோம்.விசேடமாக சம்மாந்துறை பகுதியில் ஆயுதங்கள் விசேட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இவ்வாறான விடயங்களை ஆராய்வதற்காக 100க்கும் அதிகமான தேடுதல்களை நாம் மேற்கொண்டுள்ளோம் .எனவே தான் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுட்குட்பட்ட பிரதேசங்களில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நெருக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் சிவில் பாதுகாப்பு குழுக்களின் ஒத்துழைப்புடன் சமூகப் பொலிஸ் சேவையை விஸ்தரிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

இதன்போது கிராம மட்டத்தில் நிலவும் சமூக விரோத குற்றச் செயல்களை தடுப்பதற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும், பொலிஸாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் இத்திட்டத்தின் உதவியோடு நல்லுறவினை எற்படுத்துவது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம் ஜயரட்ன ,தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.எம் ரஸீட், ,சிவில் பாதுகாப்பு குழுக்களின் தலைவர்கள்,செயலாளர்கள் பொலிஸ் உயர் அதிகாரிகள் ,வர்த்தக சங்க அங்கத்தவர்கள், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுட்குட்பட்ட 96 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.