விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம்உத்தரவு!

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள், தங்கள் உடைமைகளை விடுதி அறைகளிலேயே விட்டுவிட்டு, அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில் விடுதி அறைகளை சுத்தம் செய்து, புனரமைக்கும் பணியில் கல்லூரிகள், பல்கலைக்கழக நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடவியல் மற்றும் திட்டமிடல் கல்லூரிகளின் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. விடுதிகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், மாணவர்கள் வரும் 21-ம் தேதிக்குள் விடுதி அறைகளை காலி செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

வரும் 21-ம் தேதிக்குள் விடுதி அறைகளை காலி செய்யாவிட்டால், மாணவர்களின் அறைகளில் உள்ள உடைமைகள், உடைமை பாதுகாப்பு அறைகளுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.