விடுதலை வேட்கையோடு உருவான வீட்டை உடைப்பது வரலாற்றுப்பிழை!! செல்வம்.எம்பி.

விடுதலை என்ற வேட்கையோடு வீட்டை உருவாக்கிய தமிழ்மக்கள் அதனை உடைத்தார்கள் என்ற வரலாறு உருவாகக்கூடாது. என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..

தமிழ் தேசிய கூட்டமைப்பை மௌனிக்கசெய்வதற்காகவே வன்னியில் அதிகம் பேர் களம் இறக்கப்பட்டுள்ளார்கள்.
 இந்த அபாயநிலையை உருவாக்கியது மகிந்தவும், கோட்டாவுமே. தமிழ்கூட்டமைப்பை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, என்பதை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்துவதற்கான சூழ்ச்சியாகவே இவற்றை பார்க்கமுடியும்.

இன்று அனைவரும் கூட்டமைப்பை விமர்சிக்கின்றனர். எனினும் இந்த பகுதியிலே இராணுவ சோதனை சாவடிகளை அமைத்து அடக்குமுறைகளை மேற்கொள்ளும் அரசாங்கத்தை யாரும் விமர்சிக்க முன்வரவில்லை. அதனை கூட்டமைப்பு மாத்திரமே எதிர்த்துவருகின்றது.

பாராளுமன்றத்தேர்தலில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் களம் இறக்கப்பட்டுள்ள நிலையில் எமது தேசியத்தை நசுக்க நினைக்கின்ற ஐனாதிபதிக்கும், பிரதமருக்கும் சரியான பாடத்தை நாம் புகட்டவேண்டும். இது ஒவ்வொருவரதும் கடமை. அற்ப சொற்ப சலுகைகளிற்காக எமது உரிமைகளை நாம் விட்டுக்கொடுக்கமுடியாது.

விடுதலை என்ற வேட்கையோடு வீட்டை
உருவாக்கியவர்கள் எமது மக்கள்.எமது மக்களே அதனை உடைத்தார்கள் என்ற வரலாறு வரமுடியாது. எனவே உங்கள் வாக்கினை எமது பூர்வீகம் சிதைக்கப்படுவதற்கு பாவிக்கப்போகின்றோமா அல்லது எமது மண்ணை அபகரிப்பதற்கு பாவிக்கப்போகின்றோமா என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும்.

வன்னியில் சிங்கள உறுப்பினர் ஒருவரை கொண்டுவருவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.
சிங்களவர் வரமுடியாத வன்னி மாவட்டத்திலே வருவதற்கான வாய்ப்புக்களையும், அபாயத்தையும் இன்று பலர் உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்கள். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மஸ்தான் அதற்காக வாக்குகளை எடுத்து கொடுக்கப்போகின்றார்.

அதற்கு நாம் துணைபோககூடாது. சிங்களவர் ஒருவர் இங்கு வெற்றிபெற்றால் அவரை நிச்சயம் அமைச்சராக ஆக்குவார்கள். இங்கே சிங்களகுடியேற்றங்கள் அதிகரிக்கப்படும்,எம்மை முற்றுமுழுதாக நசுக்கும் அபாயம் ஏற்படும். எனவே தனிப்பட்டவர்கள் மீது கொண்டிருக்கும் வெறுப்பை கூட்டமைப்பின் மீது காட்டமுற்படாமல். எமது இறையாண்மையையும் பலத்தையும் காட்டுகின்ற வாய்ப்பாக இந்த தேர்தலை பயன்படுத்தவேண்டும்.

கொரோனாவை காரணம் காட்டி வடக்கில் சோதனை சாவடிகளை அமைத்தார்கள். இன்று ராணுவம் எமது வீதிகளில் சைக்கிள்களில் திரிகின்றது, புலனாய்வு பிரிவினர் விதைக்கப்பட்டிருக்கின்றார்கள். எமது மக்களை அடக்குமுறையுடன் கண்காணிப்பதே அவர்களது பிரதான நோக்கமாக உள்ளது. எமது இனத்தின் பிரச்சனை நியாயமானது என்பதை தென் இலங்கைக்கு நாம் சொல்லவேண்டும்.

பட்டிணி கிடந்தாலும் தமிழர்கள் தமது இறையாண்மையை விடமாட்டார்கள் என்ற வகையில் உங்கள் வாக்குரிமையை நீங்கள் பயன்படுத்த வேண்டும். போராட்டத்திற்காக தன்னை அர்பணித்த இனம் தமிழினம். இந்த வன்னிமாவட்டம் எமது வரலாற்றைச்சுமந்திருக்கின்றது. எனவே இவர்களை தண்டிப்பதற்கான வாய்ப்பு வெகுவிரைவில் வரும். நாம் அதுவரை ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

வடக்கின் அபிவிருத்தி விடயத்தில் இந்தியாவையும், புலம்பெயர் உறவுகளையும் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் எமது முன்னாள் முதலமைச்சர் அதனை செய்யவில்லை. தமிழர்களிற்கு கடமைசெய்யவேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு அதிகம் இருக்கின்றது என்றார்.