விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் நடிகை குஷ்பு பங்கேற்க இருந்த பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு!

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி சிதம்பரத்தில் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், திருமாவளவன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் சங் பரிவார் அமைப்புகளை கண்டித்து சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் சிதம்பரத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது.

இதையடுத்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தொடர்ந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை அதிகாரிகள், இரு தரப்பின் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அறிவித்தனர். ஆனால் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றதால் பதற்றத்தை தணிக்க சிதம்பரத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.