விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர் விரைவில் வெளியாகிறதா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடிக்க, ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிப் போயிருக்கிறது.

இதனிடையே ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படக்குழு அதை முற்றிலுமாக மறுத்திருக்கிறது. அக்டோபர் 15-ம் தேதி முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில், தமிழக அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுமா என்பது தெரிய வரும்.

இந்நிலையில் மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில், “‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும்” என்று நேற்று ட்வீட் பதிவு செய்யப்பட்டது.

இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் பலர் அந்த ட்விட்டர் கணக்கை போலியானது என்று கமெண்ட் பதிவிட, ஒரு சிலரோ போலியான பக்கமாக இருந்தாலும் நல்ல அப்டேட் கொடுத்திருக்கிறார்களே என நகைச்சுவையாக பதிலளித்துள்ளனர். மேலும் இப்பதிவை 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

ரசிகர்களின் அளவு கடந்த எதிர்பார்ப்பை அறிந்து ‘மாஸ்டர்’ படத்தின் டீசர், ட்ரெய்லர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.