வாகன விபத்தில் பிரபல சிங்கள நடிகை ஹய்சின்த் விஜேரத்ன உயிரிழப்பு!

நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரபல சிங்கள நடிகை ஹய்சின்த் விஜேரத்ன (75) உயிரிழந்துள்ளார்.

அவர் பயணித்த சிற்றுந்து நேற்று(30) இரவு பள்ளம் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவுக்கு சென்று மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்தபோது லிந்துலை நகரத்திற்கு அருகில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து சம்பவித்துள்ளதாக லிந்துலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாகனத்தை செலுத்திய சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையே விபத்துக்கு காரணம் என காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் சிற்றுந்து சாரதி லிந்துலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நுவரெலியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்த நடிகையின் சரீரம் மீட்க்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.