வாகன சந்தையில் விலை உயர்வாகி உள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு

கொரோனா நெருக்கடியை அடுத்து கடந்த மார்ச் முதலான வாகன இறக்குமதி தடையினால் இலங்கையின் வாகன சந்தை நிலையற்றதாகியுள்ளதாக மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டாம் நபர் பாவனைக்கான வாகன சந்தையில் வாகனங்களின் விலை இரண்டு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வாகன விற்பனையில் இந்த வகையான சந்தை இருப்பது எதிர்காலத்திற்கு நல்லதல்ல எனவும் புத்தம் புதிய வாகனங்கள் விற்பனைக்கு இல்லாததால் 40 வீதமான வாகன விற்பனை மையங்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், விற்பனை மையங்களின் உரிமையாளர்களில் பெரும்பாலானோர் நிலத்தை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு எடுத்திருந்தனர் என்று குறிப்பிட்டுள்ள அவர், வாகன விற்பனை பூச்சியமாக இருந்தாலும் குத்தகை அல்லது வாடகை செலுத்தப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், சந்தையில் சுமார் ஆயிரம் புத்தம் புதிய வாகனங்கள் கிடைக்கின்றன எனவும் அவை தேவைக்குப் போதுமானதாக இல்லை என்றும் மெரிஞ்சிகே கூறினார்.

எனவே, இந்த அசாதாரண சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முடிவுகளை எடுக்குமாறு அவர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டதுடன் ஜப்பானிய வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது போன்ற தீர்வுகளை செயற்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.