வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் விவசாய அமைப்புக்களுக்கு இடம் , அபிவிருத்தி குழுவில் வலியுறுத்தல்

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலைய கடைத்தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் உள்ள எட்டு கமநல சேவை நிலையங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விற்பனை நிலையங்கள்  ஒதுக்கப்பட வேண்டுமென ஓமந்தை கமநல சேவை நிலையத்தின் தலைவரான செல்லத்தம்பி சிறிதரன் அவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (21)வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலேயே இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன்போது அபிவிருத்திகுழுவின் இணைத் தலைவராக கலந்துகொண்ட வடமாகாண ஆளுனர்  இது தொடர்பில் மாவட்ட செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டு சரியான முடிவை அறிவிப்பார் என தெரிவித்தார். 


அத்துடன் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு வவுனியா சந்தையில்  இடைத்தரகர்களால் அறவிடப்பட்டுவரும் 10% தரகுப்பணத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய ஓமந்தை கமநல கேந்திர நிலைய தலைவர் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களுக்கு விவசாயம் சார்ந்த பொது அமைப்புக்களுக்கு முறையான அழைப்போ அல்லது அனுமதியோ வழங்கப்படுவதில்லை எனவும் தாம் பின் கதவால்த்தான் கூட்டத்திற்கு வரவேண்டியுள்ளது எனவும் முறையிட்டார். 
தரகுப் பண விடம் தொடர்பாக தமக்கு எழுத்து மூலமாக முறையிடும்படி கூறிய இணைத்தலைவரான வடக்கு மாகாண ஆளுனர்  விவசாய சங்கங்களை ஒருங்கிணைப்பு  கூட்டங்களுக்கு முறையாக அழைப்பது தொடர்பில் தீர்வெதனையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.