வவுனியா குளத்தில் மண்நிரப்பி சுற்றுலா மையம் அமைத்தல் தொடர்பான வழக்கு தள்ளுபடி

வவுனியா குளத்தில் மண் நிரப்பி சுற்றுலா மையம் அமைக்கப்பட்டு வருவதற்கு எதிராக குடியிருப்பு கமக்காரர் அமைப்பால் வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

வவுனியா குளத்தில் நகரசபையினால் மண் நிரப்பப்பட்டு சுற்றுலா மையம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் இதனை ஆட்சேபித்து குறித்த குளத்தின் கமக்காரர் அமைப்பால் வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 
இந் நிலையில் கடந்த 18 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கை முதற்தோற்றத்திலேயே தள்ளுபடி செய்யுமாறு நகரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள வழக்கறிஞர்களால் இரண்டு ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டது.
அவற்றில் ஒரு ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டது.மற்றைய ஆட்சேபனை தொடர்பில் எதிர்வரும் 25ம் திகதி(இன்று) தெரிவிக்கப்படும் என நீதிபதியால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 
இந்நிலையில் இன்று எடுக்கப்பட்ட குறித்த வழக்கினை  தள்ளுபடிசெய்து நீதிபதி உத்தரவிட்டார். 
இவ்வழக்கில் கமக்காரர் அமைப்பு சார்பில் சட்டத்தரணி கம்சாவும், நகரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் சார்பில் சட்டத்தரணிகள் யூஜின் ஆனந்தராஜா, திருவருள், யாழினி கௌதமன், ஆகியோர் முன்னிலையானார்கள்.