வவுனியா குளத்தில் பூங்கா அமைத்தமை தொடர்பில் தகவல் கோரி தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பம்

வவுனியாவின் பிரதான குளங்களில் ஒன்றான குடியிருப்பு குளத்தில் கொரப்பத்தான வீதியோரமாக மண் நிரப்பி பூங்கா அமைத்துள்ளமை தொடர்பில் வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த சமூக ஆர்வலரொருவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை விண்ணப்பித்துள்ளார்.
வவுனியா நகரசபையினால் வவுனியா குளத்தின் நீரேந்து பிரதேசத்தில் கிரவல் மண் கொட்டப்பட்டு அப்பகுதியில் பூங்கா அமைக்கப்பட்டு வருகின்றது.
குளங்களை மூடி கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக விவசாய திணைக்களத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் அரச திணைக்களமொன்று அரச அதிகாரிகளை உள்ளடக்கி குளத்தின் நீரேந்து பிரதேசத்தினை மூடி பூங்கா அமைக்கப்படுவது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் விசனம் தெரிவித்ததுடன் இக்குளத்தின் கீழ் விவசாயம் செய்யும் விவசாயிகளும் கவலை வெளியிட்டு வந்திருந்தனர்.
எனினும் குறித்த குளம் பாரிய நீர்ப்பாசனக்குளம் என்பதனால் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் கீழ் அடங்குவதாகவும் எனவே குறித்த திணைக்களமும் இதற்கு பதிலளிக்க வேண்டும் என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தியுள்ளவர் தெரிவித்தார்.
இதேவேளை குளமொன்றின் நீர் வரத்து பகுதி மற்றும் நீரேந்து பிரதேசத்தினை மூடுவதனால் நாளடைவில் வவுனியா நகர மத்தியில் பல ஏக்கர் விவசாய நிலத்தினை கொண்டமைந்துள்ள குளம் மூடப்படும் அபாயம் ஏற்படும் எனவும் நகரசபை இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவதானது மக்களுக்கு பிழையான முன்னுதாரணமாக காணப்படும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது தொடர்பில் தகவல் கோரி நகரசபை, நீர்ப்பாசன திணைக்களம், சுற்றாடல் அதிகாரசபை, உட்பட்ட திணைக்களங்களுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தினால் தகவல் கோரப்பட்டுள்ளதுடன் வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் மற்றும் விவசாய அமைச்சுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த செயற்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்லவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.