வவுனியா கனகராயன்குளத்தில் நடமாடிய தென்பகுதியினர் தனிமைப்படுத்தலில்

வவுனியா கனகராயன்குளத்தில் தென் பகுதியில் இருந்து வருகை தந்திருந்த ஆறு பேர் சுகாதார திணைக்களத்தினரின் அர்ப்பணிப்பான சேவையினூடாக தனிமைப்படுத்தப்பட்டனர்.


கனகராயன்குளம் புதூர் பகுதியில் 6 பேர் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரப்பலகையினை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது வவுனியா வடக்கு சுகாதார பிரிவினர் சந்தேகம் கொண்டு விசாரணையினை மேற்கொண்ட போது அவர்கள் கொழும்பில் இருந்து கடந்த 29 ஆம் திகதி வருகை தந்திருந்தமை தெரியவந்தது.
இந்நிலையில் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் தாம் தங்கியிருந்த இடங்களை மறைத்திருந்த போதிலும் சுகாதார திணைக்களத்தினரின் தீவிர விசாரணையில் அவர்கள் கனகராயன்களத்தில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்ததுடன் கனகராயன்குளத்தில் உள்ள பல வர்த்தக நிலையங்களுக்கும் சென்று வந்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த 6 பேரும் அவர்கள் கனகராயன்குளத்தில் தங்கியிருந்த விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை அவர்கள் சென்று வந்த வர்த்தக நிலையங்கள் சுகாதார பகுதியினரால் மூடப்பட்டுள்ளதுடன் அப்பகுதி மக்களும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.