வவுனியாவில் விபத்தொன்றில் முதியவர் மரணம்!

 வவுனியா உலுக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் மரணமடைந்துள்ளார்.  

குறித்த விபத்து தொடர்பாக தெரிய வருகையில் வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் நோக்கிப் பயணித்த பேருந்து உலுக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது வீதியால் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.  

விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் சிகிச்சை பயனின்றி மரணமடைந்துள்ளார்.  விபத்து தொடர்பாக உலுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.