வவுனியாவில் நள்ளிரவில் 4 மணிநேர வீதி சோதனையில் 49 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

வவுனியா நகர்ப்பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட 4மணி நேரவீதி சோதனை நடவடிக்கையின் போது விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய 49 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி திஸாநாயக்க தெரிவித்துள்ளார் .
இவ்விடயம் குறித்து மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது ,
நேற்று இரவு 11 மணியிலிருந்து இன்று அதிகாலை 3 மணிவரையிலும் வவுனியா நகர்ப்பகுதியில் விஷேட வீதி சோதனை நடவடிக்கை போக்குவரத்துப் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டது . இவ் விஷேட நடவடிக்கையில் 28 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய 49 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . 
முக்கியமாக மது போதையில் ஆறு சாரதிகளும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்த மூன்று பேருக்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய 40 பேர் தலைக்கவசம் , கைத்தொலைபேசி பாவனை , காப்புறுதிப்பத்திரம் மோட்டார் ஆவணம் இன்றியும் போன்ற ஏனைய குற்றங்களுக்காக அவர்களிடம் தண்டப்பணம் அறிவிடப்பட்டுள்ளது . இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து நகரில் முன்னெடுக்கப்படவுள்ளது சாரதிகள் பொதுமக்கள் பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மேலும் தெரிவித்துள்ளார் .