வவுனியாவில் கொரோனா தொற்று உறுதி!

டுபாயிலிருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா, வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தாக்கமானது பல நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ள நிலையில் குறித்த நாடுகளில் இருக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் டுபாய், அபுதாபியில் சிக்கி தவித்த இலங்கையர்கள் விசேட விமானங்களின் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்.
அந்தவகையில் நாடு திரும்பிய அவர்கள் வவுனியா, வேலங்குளம் விமானப்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.


இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் சுகாதார தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் வேலங்குளம் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 40 பேருக்கான பி.சி.ஆர் பரிசோதணைகள் யாழ். போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது.
பரிசோதணை முடிவுகளின்படி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தொற்றுக்கு இலக்கான நபரை கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.