வலி சுமந்த இனம்..

தமிழை சுவாசித்த தங்க மீன்கள்
தனலில் சிக்கித் தவித்த காலமது..!
நிமிடம் கூட நிம்மதி இன்றி
நிழலின் நிறமாய் நிரம்பிய ஓலமது..!

அமில மனதால் அழிக்க வந்தவன்
அகதி என்ற அடையாளம் பூசிடவே…
உமிழ் நீரினை உணவாய் உண்டு
உயிரைச் சுமந்த உச்சமான சோகமது..

படுகொலைச் சத்தம் படரும் வேளையில்
படுத்து உறங்கிய பக்கத்து நாடுகள்…
நடுநிலை என்று நடிப்பைக் காட்டி
நம்பிக்கைச் சிறகை நயம்பட உடைத்தது..!

விடுதலை கேட்டு
எடுத்த முயற்சியில்
விடுப்புப் பெற்றது உயிர் மட்டுமே..!
கடுவிலை இதுவென கதறி அழுதும்
கருணை அங்கு கானல் ஒளியே..!

ஈன்ற தாயும் ஈன்றெடுத்த மகளும்
ஈக்களின் புணர்ச்சிக்கு இரையாகும் வலி…
ஆண்டவன் என்பவன் அசைவப் பிறவி
அறிந்து கொண்டோம் அந்த நொடி..!

தோன்றிய இனவெறி தோன்றாத குணநெறி
தோண்டிப் புதைத்தது எங்கள் உறவே..!

ஆலமரத்தின் ஆழமான வேர் போல
ஆதித் தமிழன் வாழ்ந்த ஈழம்…
காலன் கைப்பிடியில் கைதியாக மாறி
காலச் சக்கரத்தை கண்ணீரில் இயக்கியது..!

நீல வானம் உறங்கிய போதும்
நீந்தும் மேகம் உறங்காத நிலையாய்…
அமைதி இன்று அரங்கேறிய போதும்
அலைபாயுது அந்தக் கறுப்பு நினைவுகள்..!