வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி.கே.பழனிசாமி அறிவிப்பு!

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அஇஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி.கே.பழனிசாமி அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்று (அக்டோபர் 07) வெளியிடப்படும் என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி முன்கூட்டியே அறிவித்திருந்த நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டு குழுவை அறிவித்தார்.