வன்னிக்காடுகள் தொடர்பில் கமால் கவலை

வன்னியில் இருக்கின்ற காட்டுப்பகுதிகள் மிக வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றமை கவலை அழிப்பதாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று விஜயம் செய்த அவர் புதிதாக அமைக்கப்பட்ட கேட்போர் கூடக்கட்டட திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. 
இந்த கேட்போர் கூடத்தை அமைப்பதற்காக கடந்த காலத்தில் ஒத்துழைப்புகளை வழங்கிய அனைவருக்கும், எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். வவுனியா மாவட்டம் என்பது எனக்கு புதிதான இடமல்ல. நான் பத்துவருடங்களிற்கு முன்னர் கட்டளை தளபதியாக இந்த பிரதேசத்தில் கடமை வகித்திருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் 2 இலட்சத்து 97 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் அரவணைக்கப்பட்டு அவர்களிற்குரிய அனைத்து வகை நலனோம்பும் நடவடிக்கைகளும் எங்களால் மேற்கொள்ளப்பட்டது.இந்த மக்களுக்காகவும்,அவர்களின் நல்வாழ்விற்காகவும் அன்று அரும்பாடுபட்டு உழைத்தோம். அதற்காக இன்னொரன்ன கடப்பாடுகளை எமது பொறுப்பிலிருந்து ஆற்றியிருந்தோம். 
அந்த காலப்பகுதியில் மக்களை மீள்குடியேற்றி நிலங்களை இழந்த மக்களுக்கு வீடுகளையும் நிலங்களையும் வழங்கி,தவறான பாதையில் செல்லும் இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்கும் எமக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. அந்த கடமையை நாம் கட்சித்தமாக செய்திருந்தோம்.அந்த காலப்பகுதியில் இங்கு அரச அதிபராக கடமை வகித்த தற்போதைய வடமாகாண ஆளுனர் எம்.சாள்ஸ் மற்றும் அன்றைய அமைச்சர் றிசாட் பதியூதீன் ஆகியோரின் பங்களிப்புகள் எமக்கு உறுதுணையாக அமைந்திருந்தது.அவர்கள் எமக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். 


இன்று ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரது வழிகாட்டலில் எமக்கு சிறந்த ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளது.அந்தவகையில்  பிரதேச ரீதியாக மக்களின் பிரச்சனைகளை தீர்பதற்காக, அரச அதிபர்கள் மற்றும், பிரதேச செயலாளர்களை ஒன்றிணைத்து பிரதேசங்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்கும் நாம் ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம்.


இன்று வன்னிப்பிரதேசத்தை பார்க்கும் போது மிகவும் கவலைக்கிடமான ஒரு நிலையை நோக்கமுடியும். குறிப்பாக இங்கு இருக்கின்ற காட்டுப்பகுதிகள் மிக வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த முறைக்கேடான நடவடிக்கைகளில் இருந்து நாங்கள் விடுபடவேண்டும். வடக்கில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதானது வடக்கிற்கு மாத்திரம் அல்ல முழுநாட்டிற்கும் அபாயகரமான நிலைக்கு இட்டுச்செல்லும் என்ற விடயத்தை நாம் உணரவேண்டும். எனவே இதற்கான நடவடிக்கைகளில் அரச அலுவலர்கள் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். 

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் சமல் ராஜபக்சவின் வழிகாட்டலில் இந்த பிரதேசத்தில் இருக்கின்ற பிரச்சனைகள் அனைத்தையும் களைந்து பாதுகாப்பான அபிவிருத்தி நோக்கிய சிறப்பான பயணத்திற்கு இந்த சந்தர்பத்திலே உறுதி பூணுகின்றோம் என்றார்