வட மாகாண சாரதிகளால் இடமாற்றம் தொடர்பாக ஜனாதிபதிக்கு அனுப்பட்ட கடிதம்

சுகாதார திணைக்கள சாரதிகள் இடமாற்ற கட்டளைக்கு உடன்பட மறுப்பதனால் வட மாகாண சாரதிகளுக்கான இடமாற்றம் பிற்போடப்பட்டுள்ளமை மற்றும் சுகாதார திணைக்கள சாரதிகளுக்கும் ஏனைய திணைக்களங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து வட மாகாண அரச சாரதிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.
இக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தங்களின் அறிவுறுத்தலிற்கமைய ஆளுநரின் அனுமதியோடு கடந்த 16.09.2020 அன்று இடமாற்றங்கள் நடைமுறைக்கு வந்தது. ஆயினும் தற்போது கொவிட் – 19 ஐ காரணங்காட்டி குறித்த இடமாற்றம் 30.11.2020 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகத்தால் அறியத்தரப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பானது எமக்கு பலத்த ஏமாற்றத்தினையும் மனவேதனையையும் அளித்துள்ளது. சுகாதாரத் திணைக்கள சாரதிகள் சிலர் இடமாற்றக் கட்டளைக்கு உடன்பட மறுப்பதனாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. குறித்த சில சுகாதாரத் திணைக்கள சாரதிகள் தாங்கள் மட்டுமே சுகாதாரத் திணைக்களத்தில் பணியாற்றத் தகுதியானவர்கள் என்றும் இதங்களால் மட்டுமே நோயாளர் காவுவண்டியினை செலுத்தமுடியும் என்றும் தாங்கள் சிலர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டால் சுகாதார சேவையே முடங்கிவிடும் என்றும் தவறான கருத்துக்களை மக்கள் பிரதிநிதிகளிடம் முன்வைத்து பல தடவைகள் இடமாற்றத்தினை இடைநிறுத்தி வந்திருந்தார்கள்.

அந்தவகையில் இம்முறையும் சுகாதாரத் திணைக்கள சாரதிகள் சிலர் அதீத சுயநலத்தோடும் மனிதாபிமானமற்ற முறையிலும் தற்போதைய கொவிட் – 19 சூழலிலும் தொடர் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவேளை ஏனைய திணைக்கள சாரதிகள் ஆகிய நாங்கள்  நோயாளர் காவு வண்டிகளை திறம்பட இயக்கி தடங்கல் இல்லாத சுகாதார சேவைக்கு அர்ப்பணிப்போடு பணியாற்றினோம். இவ்வாறாக இடமாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதற்கு கொவிட் – 19 காரணமாகக் கூறப்பட்டுள்ளபோதும் மாறாக சுகாதாரத் திணைக்கள சாரதி சேவையை மூடிய சேவையாக்குவதற்குரிய அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவே எம்மால் அறியமுடிகிறது.

பிரதம செயலாளர்களின் மாநாட்டின்போதும் 2017ல் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டிலும் இந்த ஆண்டு ஆரம்பதத்தில் இடம்பெற்ற ஆளுநர்கள் மாநாட்டிலும் சுகாதார திணைக்கள சாரதி சேவையை மூடிய சேவையாக்குவதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. எனவே சுகாதார திணைக்கள சாரதி சேவையை மூடிய சேவையாக்குவதன் மூலம் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் பின்வருமாறு.

1. வேறு திணைக்களங்களிலிருந்து சுகாதாரத் திணைக்களத்திற்கு கடமையாற்ற விரும்பும் சாரதிகளின் உரிமைகள் மறுக்கப்படல்,

2. இடமாற்றமின்றி மூடியசேவைக்குள் தொடர்ந்து பணியாற்றுவதனால் அச்சேவையில் உள்ளவர்கள் இலகுமாக ஊழல்கள் செய்ய வழி ஏற்படும்.,

3. மனம் கவர் சேவை நிலையமாகிய சுகாதாரத் திணைக்களத்திற்கு இடமாற்றம் மறுக்கப்படுவதன் மூலம் மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் பிரயாணப்படி குறைந்த ஏனைய அலுவலகங்களில் கடமையாற்றும் சாரதிகளின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படல்.,

4. சுகாதாரத்திணைக்கள சாரதிகளை மூடிய சேவையாக்குவதன் மூலம் குறித்த செயற்பாடு தவறான முறையில் முன்னுதாரணப்படுத்தப்பட்டு சலுகை கூடிய சேவைக்குள் அடங்கும் சாரதிகள் உட்பட வேறு நிலைய உத்தியோகத்தர்களாலும்  தமது சேவையை மூடிய சேவையாக்குவதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் நிலை உருவானால் குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ள பாதிப்புக்களைக் கவனத்தில் கொண்டு அமைச்சரவைத் தலைவர் என்ற ரீதியில் குறித்த தீர்மானம் நீர்த்துப் போவதற்கு தங்களாலான பங்களிப்பினை வழங்குமாறு தயவோடு கேட்டுக்கொள்கின்றோம். அத்தோடு தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ள இடமாற்றத்தினை விரைந்து நடைமுறைப்படுத்த ஆவனசெய்துதவுமாறும் அனைத்து சாரதிகளும் சுழற்சிமுறையில் சுகாதாரத் திணைக்களத்திற்குள் இடமாற்றம் பெற்றுச் சென்று அங்குள்ள வரப்பிரசாதங்களைப் பெறக்கூடியவகையில் தற்போது நடைமுறையிலுள்ள இணைந்த சேவைமுறை தொடர்ந்திருக்க ஆதரவு வழங்குமாறும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.