வங்கி மோசடிகள் குறித்து விசாரிக்க குழு

கடந்த 5 வருட காலப்பகுதிக்குள் 4 அரச வங்கிகளில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நால்வர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

மக்கள் வங்கி, இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் தெளிவாக ஆராய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குழுவின் தலைவராக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சிசிர ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சின் உறுப்பினர் ஒருவர் குறித்த குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த குழு உறுப்பினர்களான பட்டய கணக்காளர் சுசந்த த சில்வா, ஓய்வுபெற்ற மேலதிக கணக்காய்வாளர் நாயகம் டபுள்யூ. பிரேமாநந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினூடாக மூன்று மாதங்களுக்கு வழங்கப்படவுள்ள அறிக்கை நிதி அமைச்சின் செயலாளர் ஊடாக அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது