லெபனான் இராணுவத்திற்கு அதிகாரம் வழங்க ஒப்புதல்.

லெபனான் அரசு இராஜினாமா செய்துள்ள நிலையில் இராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 தொன் அமோனியம் நைட்ரேட் கடந்த 4ஆம் திகதி வெடித்துச் சிதறியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விபத்திற்கு எதிர்ப்பு, ஊழல், அரசின் நிர்வாகத்தோல்வி, நிலைத்தன்மையற்ற அரசியல் போன்றவற்றை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் லெபனான் அரசு மொத்தமாக இராஜினாமா செய்ய முடிவு செய்தனர்.

அதற்கு முன் அவசரகால நிலையை அறிவித்து, நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி தேவை என்பதால் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றம் கூட்டப்பட்டது. அப்போது அவரசகால நிலை அறிவிக்கப்பட்டதுடன் இராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்பின் அனைவரும் இராஜினாமா செய்தனர்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க, பொதுமக்கள் கூடுவதை தடுக்க, ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும் இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு மீறல்களுக்காக பொதுமக்களை இராணுவ தீர்ப்பாயங்களுக்கு பரிந்துரைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.