ரிஷாட் பதியுதீனுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு தினத்தில், புத்தளம் பகுதியிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை, அரச பேருந்துகள் ஊடாக மன்னார் பகுதிக்கு அழைத்து சென்று வாக்களிக்க வைத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ரிஷாட் பதியுதீன் பிணை கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த 13ஆம் திகதி நிராகரிக்கப்பட்டதுடன், வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் வரையில் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.