ரஷ்யாவின் தலையீட்டால் அர்மீனியா-அஜர்பைஜான் இடையே நீடித்து வந்த சண்டை முடிவுக்கு வந்தது!

நாகோர்னோ-காராபாக் எனும் மலைப்பிரதேசம் யாருக்கு சொந்தமாகியது என்பது தொடர்பாக முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அர்மீனியா-அஜர்பைஜான் இடையே 30 வருடங்களுக்கும் மேலாக பிரச்சனை நீடித்து வருகிறது. நாகோர்னோ-காராபாக் பகுதி அஜர்பைஜானுக்கு உரிமையானது என்றாலும், அர்மீனிய இனத்தவர்களே அதனை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த பிரச்சனை கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மீண்டும் ஆயுத சண்டையாக மாறியது. அர்மீனியா-அஜர்பைஜான் படைகள் கடுமையாக மோதிக்கொண்டன. இரு தரப்பும் துப்பாக்கிச்சூடு, வெடிகுண்டு வீச்சு என நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்தனர்.

இதனிடையே, உலக நாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக அர்மீனியா-அஜர்பைஜான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பகுதியில் கிடக்கும் உடல்களை ஒப்படைப்பது, கைதிகளை விடுவிப்பது என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் (Sergei Lavrov) கூறியுள்ளார்.