யாழில் 3915 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம்  – புங்குடுதீவில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக  3915 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

மேலும் அந்தப் பகுதியில் முழுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் நேற்று (07) இடம்பெற்றது.

இந்த கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “எங்களைப் பொறுத்தவரைக்கும் புங்குடுதீவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக 1212 குடும்பங்களைச் சேர்ந்த 3915 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சந்தர்ப்பத்திலே யாழ்ப்பாண மாவட்டம் தற்போதைய அனர்த்தத்தை மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

ஆகவே அபாயகரமான சூழல் என்று நாங்கள் தற்பொழுது கருதப்பட வேண்டிய புங்குடுதீவு பகுதி முற்றுமுழுதாக முடக்கப்படுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் ஏனைய பகுதிகளிலும் சில சில செயற்பாடுகளை அரசாங்கத்தினுடைய அறிவுறுத்தலின் பிரகாரம் முடக்கி இருக்கின்றோம். அல்லது தற்காலிகமாக நிறுத்தி இருக்கின்றோம்.

இனிவரும் காலங்களில் சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் பேருந்தில் பயணிக்கும்போது ஆசன மட்டத்திற்கு அமைவாக பயணிகளை கொண்டு செல்வதற்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம் .

பேருந்துகளையும் முறையாக தொற்று நீக்கி சேவையில் ஈடுபடுத்துமாறும் கோரியுள்ளோம். ஆகவே பொதுமக்கள் இந்த நிலமையை அனுசரித்து நடந்தால் எங்களுடைய தொற்று நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். தொற்று ஏற்படுவதை தடுத்து நிறுத்தலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.