யாரோ மொழிபெயர்த்த மனு தர்ம நூலை வைத்து திருமாவளவன் குறைகூறவது தவறு என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ படிப்பில் ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவித இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் இதை உரிமை கொண்டாட நினைக்கும் மு.க.ஸ்டாலினின் எண்ணம் எடுபடாது என்றும் தெரிவித்தார். 

தொடர்ந்து அவர், மனுதர்ம நூல் குறித்து பேசினார். யாரோ ஒருவர் மொழிபெயர்த்த மனு தர்ம நூலை வைத்து திருமாவளவன் குறைகூறுவது தவறு என்று தெரிவித்த அவர், மனுதர்ம நூலில் சில நல்ல கருத்துகள் உள்ளது என்று கூறினார். அதே போல் ஜனநாயக நாட்டில் உரிமையோடும் உணர்வோடும் எல்லோரும் போராட்டம் நடத்தலாம், யாத்திரை நடத்தலாம், அதை தடை செய்ய சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை என்றும் கூறினார். 

பின்னர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “ரசிகர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் ஆதங்கம் ரஜினிகாந்திடம் உள்ளது. ரஜினிகாந்த் 40 ஆண்டுகள் தமிழக மக்களோடு கலந்தவர். அதனால் அவர் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.. மக்களும் ஏற்றுக்கொள்வார்கள்.” என தெரிவித்தார்.