மேல் மாகாணத்தில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு-உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு எவ்வித நெருக்கடி நிலையும் ஏற்படாது

மேல் மாகாணத்தில் நாளை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினால் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு எவ்வித நெருக்கடி நிலையும் ஏற்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மேல்மாகாணம் முழுவதும் நாளை நள்ளிரவு தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பொது போக்குவரத்து சேவைகள் பாதுகாப்பான முறையில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.உயர்தர பரீட்சை நிறைவு பெறும் வரையில் இச்சேவையை தொடர்ந்து சிறப்பான முறையில் முன்னெடுக்குமாறு ரயில் திணைக்களம் மற்றும் அரச போக்குவரத்துச் சேவைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு பொதுப் போக்குவரத்துச் சேவையினை வழமை போன்று முன்னெடுப்பதாக அரச பொதுபோக்குவரத்துத் துறையினர் உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.எனவே, மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால் பரீட்சார்த்திகளுக்கு எவ்வித நெருக்கடி நிலையும் ஏற்படாது” என்று தெரிவித்தார்.