மேன்முறையீட்டை நிராகரித்து அலெக்ஸி நவல்னிக்கு சிறைத் தண்டனை!

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து அவர் செய்த மேன்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.கடந்த மாதம் ஜேர்மனியில் சிகிச்சை முடித்து, நாடு திரும்பிய நவல்னி, 2014 இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனையின் பரோல் நிபந்தனைகளை மீறியதற்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.இந்நிலையில், கடந்த இரண்டாம் திகதி நவல்னிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை மொஸ்கோ மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) உறுதிசெய்தது. இதையடுத்து, நவல்னி இரண்டரை ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை அனுபவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, நவல்னியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் (ECHR) கோரிக்கையை ரஷ்ய அரசாங்கம் மறுத்திருந்தது.அத்துடன், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோதமானது எனவும் ரஷ்யாவின் விவகாரங்களில் தலையிட அனுமதிக்க முடியாது என்றும் ரஷ்யா அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.