மு.க ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி !

கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மு.க ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி மறைந்த இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி, உதயநிதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்திலும் கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தியதுடன், சிஐடி காலனியில் உள்ள இல்லத்திலும் கருணாநிதி படத்திற்கு ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். சிஐடி காலனியில் மாநகராட்சி பணியாளர்களுக்கு ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் கட்சியின் மூத்த தலைவர்களான துரைமுருகன், டி.ஆர் பாலு, உள்ளிட்டோருடன் மு.க ஸ்டாலின், கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கருணாநிதியின் நினைவுநாளை முன்னிட்டு அவருடைய சாதனைகளை நினைவுகூறும் விதமாக ட்விட்டர் சமூகவலைதளத்தில் எங்கெங்கும் கலைஞர் என்ற ஹேஷ்டேக்கை திமுகவினர் மற்றும் கலைஞரின் ஆதரவாளர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.